அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில், குறித்த தம்பதியர் மற்றும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மாணவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் சுமார் 6 மாதங்களாக தோட்ட வேலை என்ற பெயரில் சம்மாந்துறை 40 வீட்டுத்திட்ட பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட மாணவர் ரூ.12,000 பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வாங்க வந்தபோது பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கைப்பேசிகள், 3 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வங்கி புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சில சந்தேகநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், பெண் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக