முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான சுற்றுலா ஊக்குவிப்பு பணியக நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், சர்வதேச பிடியாணை பெறும் நடைமுறை குறித்து கோட்டை நீதவான் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு நேற்று (10) மீண்டும் நீதவான் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு தேவையான சத்தியக்கடதாசியை (affidavit) தாக்கல் செய்து சர்வதேச பிடியாணை நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என நீதவான் பசான் அமரசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் காலத்தில், அரசியல் கட்சி விளம்பரங்களுக்காக 12,000 T-ஷர்ட்கள் அச்சிட இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் ரூ.7.8 மில்லியன் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக CID-இன் சட்டவிரோத சொத்துகள் பிரிவு நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் பசில் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, அவருக்கு பிடியாணை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே சர்வதேச பிடியாணை குறித்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான முன்னாள் அதிகாரி ரூமி ஜவ்பர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக