பிரான்ஸின் பாரிஸில் அமைந்துள்ள Forensic Risk Alliance (FRA) நிறுவனத்தின் பங்குதாரரும், அதன் பாரிஸ் அலுவலகத் தலைவருமான யூஸ்ர் கலீலே இவ்வாறு இலங்கை வரவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான Airbus இலஞ்ச வழக்கில், அரசுத் தரப்பு முக்கிய சாட்சிகளில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.
Airbus நிறுவனத்தின் உலகளாவிய விமானக் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச விசாரணையில், யூஸ்ர் கலீல் முக்கிய பங்காற்றியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணை, பல்வேறு நாடுகளில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்திருந்தது.
இதேவேளை, Airbus நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்ல் ஹென்னெஸியும் (Karl Hennessee) குறித்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக Airbus விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றங்கள் குறித்தே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பான இறுதித் தீர்ப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக