கொழும்பிலுள்ள பல உணவகங்களில் பணிபுரிந்து வந்த மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சமீபத்தில் தங்களின் பணிகளை விட்டு மீண்டும் தோட்டத் துறைக்குத் திரும்பும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூ.1,750 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த பலர் உணவகங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் கொழும்பு நகரில் உள்ள பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் கடும் பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.
பொரளை, மருதானை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் சமையல்காரர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் பல துணை ஊழியர்களாகப் பணியாற்றியவர்களில் பெரும்பாலோர் மலையகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணியாளர்கள் திடீரென விலகிச் செல்வதால், தினசரி சேவைகளை வழக்கம்போல் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சில இடங்களில் பணிநேரம் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய பணியாளர்களை சேர்ப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலை தொடருமானால், நகர்ப்புற உணவகத் துறையில் மேலதிக சவால்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக