முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எனக் கூறப்படும் குமாரசிறி என்பவரின் காணி உரிமை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள திருப்பெருந்துறையில் அமைந்துள்ள மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் தனக்குக் காணி இருப்பதாகக் கூறி, குமாரசிறி என அழைக்கப்படும் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தொடர்ச்சியாகக் காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு முதல் குறித்த நபர் இந்த இடத்தில் தனக்குக் காணி உரிமை இருப்பதாகக் கூறி, வேலிக் கம்புகள் மற்றும் மரக்கட்டைகளை நாட்டி காணியைச் சுற்றிவளைக்க முயற்சித்து வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கும் அவருக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் குறித்த இடத்தில் நாட்டப்பட்டிருந்த வேலிக் கம்புகள் மற்றும் மரக்கட்டைகள் பிடுங்கி அகற்றப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (10) மீண்டும் அங்கு வந்த குறித்த நபர், கொங்கிரீட் தூண்களை அமைப்பதற்காகக் கற்கள், மணல், சீமெந்து மற்றும் கொங்கிரீட் தூண்களை அங்கு இறக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவரை அந்த இடத்திலிருந்து வெளியேறச் செய்துள்ளனர்.
இந்தக் காணி விவகாரம் தொடர்பில் கிராம மக்கள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த மாதமே, மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் உரிமையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாகவும், கிராம மக்களின் சார்பாகவும் ஜனாதிபதிக்கு எழுத்துமூலமான கடிதம் ஒன்றை அனுப்பி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையிலும், குறித்த காணி விவகாரத்தில் தீர்வு எட்டப்படாமல் மீண்டும் கட்டுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக