கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தபோது, மாநகர சபையின் மேயர் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஜனசெத பெரமுன கட்சியின் அலுவலகத்தில் சனிக்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் தேவைகளுக்காக மகா சங்கத்தினரையும் பௌத்த மதத்தையும் பயன்படுத்திக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
தங்களது தேவைகள் நிறைவேறிய பின்னர் மகா சங்கத்தினரைப் புறக்கணித்துவிடுவதாகவும், அரசியல் தலைவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே மகா சங்கத்தினரும் விகாரைகளும் நினைவுக்கு வருவதாகவும் அவர் சாடினார்.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மகா சங்கத்தினர் விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டம் நடத்தியபோது, கொழும்பு மாநகர சபையின் மேயர் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், அந்தச் சம்பவத்தை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனை மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவாக ஏற்பட்ட கர்மவினை எனத் தனது கருத்தை வெளியிட்டார்.
மேலும், கொழும்பு மாநகர சபை வடிகால்களை முறையாகச் சுத்தப்படுத்தவும் பராமரிக்கவும் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளும் போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
தனக்குத் தெரிந்த காலம் முதல் வெள்ளத்தால் பாதிக்கப்படாத கொழும்பு தேசிய வைத்தியசாலைகூட தற்போது நீரில் மூழ்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியது கொழும்பு மாநகர சபையின் மேயரே எனக் கூறினார்.
தேர்தல் காலங்களில் மக்களிடம் வாக்குக் கேட்டு வீடு வீடாகச் சென்ற அரசியல் தரப்பினர், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைப் பொறுப்புடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்வரும் தேர்தலில் மக்கள் தற்போதைய நிர்வாகத்தைப் பதவியிலிருந்து அகற்றுவார்கள் என்றும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக