கொழும்பு கொஹுவல பகுதியில் மின்சாரக் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஏற்படுத்திய தொடர் விபத்தில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 16 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நவம்பர் 23-ஆம் தேதி, திங்கட்கிழமை பிற்பகல், கொஹுவல எஸ். டி. எஸ். ஜெயசிங்க மாவத்தையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நுகேகொடையைச் சேர்ந்த 16 வயது மாணவன் கபிஷன் காத்திருந்தார்.
இதன்போது மாணவன் மீது, நுகேகொடையிலிருந்து கொஹுவல நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், 'AION' ரக மின்சாரக் கார் (battery-electric car) ஒன்றின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
முதலில் சாலையில் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் காரின் பின்புறத்தில் அந்த கார் மோதியது. நிற்காமல் தொடர்ந்து சென்ற கார், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவன் கபிஷன் மீது மோதியது. அதன் பின்னரும் மீண்டும் பிரதான சாலைக்குத் திரும்பிய கார், அங்கிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ஒரு கார் மற்றும் ஒரு வேன் மீதும் அடுத்தடுத்து மோதி நின்றது.
இந்தத் தொடர் விபத்தில் படுகாயமடைந்த மாணவன் கபிஷன், உடனடியாகக் கலுபோவில கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.
விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த, பனதுர - மொரவில பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாகனத்தில் ஏற்பட்ட விவரிக்க முடியாத அசாதாரணமான தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தம்மால் காரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மொத்தம் ஐந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட இச்சம்பவம் குறித்து கொஹுவல காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக