இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநரைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து, செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலிக் காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் இவ்வாறான போலிக் காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் பரவி வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வங்கி ஆளுநர் நிதி ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பரிந்துரைப்பது போன்ற தோற்றத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அவற்றில் முன்வைக்கப்படும் நிதி ஆலோசனைகள், முதலீட்டு வாய்ப்புகள் அல்லது கூற்றுகளின் அடிப்படையில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் .
மேலும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிக் காணொளிகளின் சில எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கிய விழிப்புணர்வு அறிவித்தலையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
எனவே, எந்தவொரு நிதி அல்லது முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு வழிமுறைகள் ஊடாக தகவல்களை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவ்வாறான போலியான காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் அவற்றைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் சமூக ஊடகப் பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் நிதி முதலீட்டு விளம்பரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அவற்றை நம்பி பணத்தை முதலீடு செய்வது நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கலாம் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக