நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் நேற்று (12) இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி , சங்கராஜ மாவத்தையில் நேற்று காலை தென்னேகும்புர திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும் பின்னால் பயணித்த பெண்ணும், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பாணந்துறை ,கிம்பத மாவத்தையில் நேற்று இரவு திக்கள திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் கை வண்டியைத் தள்ளிச் சென்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவரே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் காயமடைந்து சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக