நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும் நிவாரண நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பின் காரணமாக உருவான இந்த வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் இதுவரை குறைந்தது 1,114 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத் பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 540க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட பாலங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதால், தொலைதூர கிராமங்களுக்கு இராணுவ வானூர்திகள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 12,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள போதிலும், நீர்மின் நிலையங்களின் நிலத்தடிச் சுரங்கங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பேரழிவு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, இது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத பேரழிவு என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்று மாத கால அவசரநிலையை நேபாள அரசு அறிவித்துள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நான்கு மாத கால சர்வதேச நிவாரண உதவிக்கான கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.
இந்நிலையில், ரசுவாகாதி நீர்மின் நிலையத்தின் நிலத்தடிச் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 46 தொழிலாளர்கள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சுரங்கப் பாதையின் பாதுகாப்பான பகுதியில் அவர்கள் சிக்கியிருப்பதாகவும், அங்கு உணவு மற்றும் குடிநீர் இருப்பதால் ஒரு வாரத்திற்குப் பின்னரும் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் நேபாள மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரசுவா மாவட்டத்தில் அமைந்துள்ள 111 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் சுரங்கங்களில் நேபாள இராணுவத்தினரும் இந்திய மற்றும் சீன சிறப்பு மீட்புக் குழுக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை நீர்மின் திட்டப் பகுதிகளில் இருந்து 279 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களை மீட்கும் பணிகளில் அதிநவீன தொழில்நுட்பங்களும் சர்வதேச மீட்புக் குழுக்களின் உதவிகளும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக