பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை, எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்று (01.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை செப்டம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அவரது விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், நேற்று அவர் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்படவில்லை.
இதனையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று மாநகரசபையின் மேயராக சக்கி அதாஉல்லா பதவி வகித்த காலத்தில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறித்த பெண் சமூக வலைத்தளமான பேஸ்புக் நேரலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், சந்தேகநபரை ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர் ஆகஸ்ட் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, விளக்கமறியல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக செப்டம்பர் 9ஆம் திகதி வரை அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக