கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்குட்பட்ட கேசகோடு கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபருக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்சினை நிலவி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தன்று மனைவியை காரில் அழைத்துச் சென்ற கணவர், வழியிலேயே அவருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் காருக்குள் வைத்து மனைவியை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், கொலை சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த அவர், கேசகோடு கிராமத்துக்குச் சென்ற பின்னர் தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு காணொளி அழைப்பு மூலம் தொடர்புகொண்டு மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்ததாகவும், பின்னர் அந்த காணொளியை அவர்களுக்கு அனுப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்ற போதிலும், அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.
பின்னர் கேசகோடு கிராம எல்லைப் பகுதியில் சாலையோரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, சம்பவத்திற்கு முன்னர் அவர் உறவினர்களுடன் மேற்கொண்ட காணொளி அழைப்பு தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக