இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டெங்கு தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதி கோரி கோரிக்கைப் படிவம் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதத்தில் இதுவரை மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கை இதுவாகும்.
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை இலங்கையில் 82,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், டெங்கு காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்று மட்டும் புதிதாக 500 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பல நாடுகள் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது ஒப்பீட்டளவில் புதிய தடுப்பூசி என்பதால், அதன் முழுமையான செயல்திறன் குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குறித்த தடுப்பூசியை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக