இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களின் தாக்கத்தால், தங்க நகைகளை அடமானம் வைத்து வங்கிகளிடமிருந்து கடன் பெறும் மக்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 351.45 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது சதவீத அடிப்படையில் சுமார் 54 சதவீத அதிகரிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் மொத்த அளவு ரூ. 660 பில்லியனாக பதிவாகியிருந்ததாகவும், இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மட்டும் ரூ. 101.1 பில்லியன் மதிப்பிலான புதிய அடகு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், பணவீக்கத்தின் தாக்கம் காரணமாக குடும்பங்களின் நிதிசுமை அதிகரித்திருப்பதே இந்த நிலைக்கு முக்கிய காரணமாக பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தங்க நகைகளை அடமானம் வைப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளின் விளைவாக நாட்டிலுள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் தங்க நகைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிதி நிறுவனங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பணவீக்கம், உயர்ந்த வாழ்க்கைச் செலவு மற்றும் தொடர்ச்சியான பொருளாதார சவால்கள் காரணமாக ஏராளமான மக்கள் தங்களது தங்க நகைகளை அடகு வைப்பதோ அல்லது விற்பனை செய்வதோ மூலம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, பொருளாதார நெருக்கடி காலத்தில் தங்க அடகு கடன்களின் மொத்த மதிப்பு ரூ. 356 பில்லியனை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நாட்டில் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு தொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை இதுவரை மத்திய வங்கியோ அரசாங்கமோ வெளியிடவில்லை.
உலகளாவிய தங்க சந்தை விலை மாற்றங்கள் மற்றும் இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகளின் தாக்கத்தால், நாட்டில் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மேலும், பொருளாதார நெருக்கடியின் தாக்கமாக பல்வேறு தரப்பினரால் சுமார் பத்து இலட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சமீபத்திய கணக்கெடுப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக