நாட்டின் பல பகுதிகளில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது அதிகரித்து வருவதாகவும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி நாணயத்தாள்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொட்டிகாவத்தை பகுதியில் 55 வயதுடைய பெண் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து 6,300 போலி 100 அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேகநபர் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை 251 போலி நாணயத்தாள்கள் மற்றும் 6,924 வெளிநாட்டு நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வங்கி மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளின் போது பெறப்படும் நாணயத்தாள்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நீர் முத்திரை, பாதுகாப்பு விளிம்பு மற்றும் பிற பாதுகாப்பு அடையாளங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நாணயத்தாள்கள் கிடைத்தால் அவற்றை மீண்டும் புழக்கத்தில் விடாமல் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக